கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் நகரில் வசித்த மக்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஒரு தரப்பினர் வீட்டைவிட்டு வெளியேறி வெளியூர்களில் தஞ்சமடைந்தனர்.
எதிர்த்தரப்பினரின் மிரட்டலுக்கு அஞ்சியும், உயிர் பயத்தாலும் அந்த 28 குடும்பத்தினர் கடந்த 4 ஆண்டுகளாக வெளியூரிலேயே வசித்து வந்தனர். அவர்கள் ஆசை ஆசையாகக் கட்டிய வீடுகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துபோனது.
இந்நிலையில், அண்மையில் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு வந்த ஆய்வாளர் அம்பேத்கர் எடுத்த முயற்சியால், மீண்டும் அந்த 28 குடும்பத்தினரும் பண்ருட்டியில் உள்ள அம்பேத்கர் நகரில் குடிவருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர். ஆசையாய்க் கட்டிய வீட்டில் மீண்டும் வாழ வழிவகை செய்த காவல் துறையினரை, அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டனர்.
இது எப்படிச் சாத்தியமானது எனக் காவல் ஆய்வாளர் அம்பேத்கரிடம் பேசினோம். “பாதிக்கப்பட்ட தரப்பினர் தாங்கள் சொந்த ஊரில் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வருவாய் வட்டாட்சியர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் இருதரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் தீர்வு ஏற்பட்டது.
4 ஆண்டுகளாக பூட்டியே கிடந்த 28 வீடுகளுக்கும் மீண்டும் மின் இணைப்பு வழங்குதல், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என பல உதவிகளை அவர்களுக்குச் செய்து கொடுத்தோம். பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
இந்தச் செய்தியைத் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் அம்பேத்கர், அதில், “இரு தரப்பினர்களுக்கும் இணைப்பு ஏற்படுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. இனியாவது அனைவரது வீடுகளிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாமானிய மக்களைச் சாகடிக்கும் சாத்தான்(குளம்)களுக்கு மத்தியில் வாழவும் வழி சொல்ல தமிழக காவல் துறையில் சிலர் இருக்கின்றனர்.