சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அப்போது அவர், "சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இச்சிகிச்சை மையத்தில், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கூடிய அளவில் திறம்பட செயல்படக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்டு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு மையமாக செயல்படும். விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு இச்சிகிச்சை மையத்தின் மூலம் உயிர்காக்கும் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பற்றப்படுவார்கள். இதேபோல் சிகிச்சை மையம் தாம்பரம், பாடியநல்லூர், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் வேப்பூரில் இச்சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட, இந்த விபத்து அவசர சிகிச்சை மையங்கள் மூலம் 43,592- பேர் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். இந்த மையத்தினால் கடலூர் மாவட்ட மக்கள் பெரும் நன்மை அடையமுடியும். தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட மக்களின் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற வழிவகை செய்யப்படும்" என்றார். நிகழ்ச்சியில் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.