கடலூர் மாவட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை (04/03/2022) நடைபெற்றது. இதில் கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி இருளர் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தலைவர் பதவிக்கு இருளர் சமூகத்தைச் சேர்ந்த 10- வது வார்டு உறுப்பினர் மல்லிகா போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் மல்லிகா, கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் இருளர் சமூகத்திலிருந்து எவரும் தலைவர் உள்ளிட்ட எந்தப் பதவிகளையும் வகிக்கவில்லை. தற்போது கிள்ளை பேரூராட்சியில் இருளர் சமூக பெண் தலைவராகப் பதவி ஏற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.
இதனைத் தொடர்ந்து துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட 6- வது வார்டு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதையடுத்து பேரூராட்சி துணைத்தலைவராகப் பதவயேற்றுக் கொண்டார்.