Skip to main content

கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு
கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருகிறார். விருத்தாசலத்தில் அரிமா சங்கம் நடத்தும் செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்,  நாளை கடலூரில் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார். கவர்னரின் இந்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஆளுநரின் எல்லை மீறிய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், கடலூர் மாவட்ட ஆய்வு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய (15.12.2017) அன்று கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில், தமிழக ஆளுநர் அவர்கள் வருகை தர இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழக ஆளுநர் கோவை, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் ஆளுநர் அவர்கள் தேவையற்ற முறையில் நடைமுறையில் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வு செய்யும் நடைமுறை ஏற்க கூடியதுதல்ல.  எனவே தமிழக அரசின் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகப் பணிகளில் ஆளுநர் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.

ஆளுநர் மூலமாக மத்திய பாஜக அரசு தமிழகத்தில் கொள்ளைப்புற வழியாக காலுன்ற முயற்சிகளை செய்கின்றனர். இதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு வேடிக்கைப் பார்த்து கொண்டு வாய்மூடி மௌனமாக இருந்து கொண்டு இருக்கிறது.  எனவே ஆளுநரின் எல்லை மீறிய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  கடலூர் மாவட்ட ஆய்வு கூட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிட அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்