Skip to main content

கரோனா எதிரொலி... கவலையில் இருக்கும் கூலித் தொழிலாளர்கள்... 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

மோடி அறிவித்த சுய ஊரடங்கு நேற்று நடந்தது. போக்குவரத்து வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அதற்குத் தகுந்தவாறு தங்களைத் தயார் படுத்திக் கொண்டனர். அப்படி இருந்தும் பஸ் வசதி இல்லாததால், திட்டக்குடி - தொழுதூர் சாலையில் குறவர் இனத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் தங்கள் குழந்தைகளை கழுதை மீது அமர்த்தி தங்கள் பிழைப்பிற்காக வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 

நேற்று ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஏகப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பல கோவில்களில் முன் அனுமதி பெற்று நடைபெற வேண்டிய திருமணங்கள் அரசு உத்தரவால் கோவில்களில் நடத்த முடியவில்லை. கோயில்கள் மூடப்பட்டதால் கோயில் வாசலில் வைத்து பல்வேறு திருமணங்கள் நடந்தன. 

 

Cuddalore



 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் ஐந்து திருமணங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த மேற்படி கோயிலில் திருமணம் நடைபெறுவதை அரசு தடை செய்ததால் எருமானூர் சேர்ந்த மணமகன் சுரேந்தர் - ஆர்த்தி ஆகியோர் திருமணம் கோயில் வாசலில் நின்றபடியே தாலிகட்டி உள்ளனர்/ உறவினர்கள் 10 பேர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.  இதேபோன்று ஐந்து திருமணங்கள் பத்து நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு ஊருக்கு கிளம்பினர்.
 

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டன. விழுப்புரம் பஸ் நிலையத்தில் அரசு முன்னறிவிப்பு செய்தும் கூட வெளியூர் செல்ல வந்தவர்கள் பஸ் நிலையத்திலேயே முடங்கிக் கிடந்தனர். பலர் பஸ் நிலையத்தில் காத்து கிடந்தனர். ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளதால் பட்டினியோடு கிடந்தவர்களை பார்த்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் உணவு பொட்டலங்கள் தயாரித்து பஸ் நிலையங்களில் பசியோடு காத்திருந்த பயணிகளுக்கு  வழங்கினார்கள்.
 

பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியாமல், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் இருந்து லால்குடி, கல்லக்குடி, வளாடி ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். 

 

Cuddalore


 

கரோனா வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. வைரஸின் வீரியம் அதிகரிக்குமா குறையுமா முற்றிலும் அழிக்கப்படுமா இப்படிப் பல்வேறு கேள்விகளை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் அன்றாட கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு கிடைக்கும் என்ற நிலையில் உள்ளவர்கள் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள்தான் இவர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்