கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (21/08/2020) வரை 8083 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று (22/08/2020) பரிசோதனை முடிவு வெளியானதில் 309 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8392 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று (22/08/2020) கடலூர் முதுநகர், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை கண்டித்த ஆட்சியர் அவர்களுக்கு தன்னிடமிருந்த முகக்கவசங்களை வழங்கி அணியுமாறு கேட்டுக் கொண்டார். குறிஞ்சிப்பாடியில் ஆய்வு செய்தபோது சமூக இடைவெளி பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த கடைகளுக்கு 'சீல்' வைக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, "கரோனா பரவலைத தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.