Published on 02/05/2020 | Edited on 02/05/2020
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றியவர்களுக்கு கரோனா தொற்று பரவியதை அடுத்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த சுமார் 600 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்கள் விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, தொழுதூர் ஆறுமுகம் கல்லூரி, வேப்பூர் ஜெயப்பிரியா பள்ளி, பண்ருட்டி அண்ண பல்கலை கழக பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உமிழ் நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் விருத்தாசலம் முகாமில் உள்ள 7 பேர் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 7 பேர் மற்றும் ஏற்கனவே புட்டபர்த்தி சென்று வந்த முதியவர் மற்றும் கோயம்பேட்டிலிருந்து வந்த 2 பேர் என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் 10 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக மொத்தம் கரோனா தொற்றின் எண்ணிக்கை கடலூர் மாவட்டத்தில் 13 ஆக உள்ளது.
இந்நிலையில் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் மற்றும் அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா முடிவு நமக்கு சாதகமாக வரும் நிலையில், திடீரென இப்போது ஏழு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பலருக்கு முடிவு வர உள்ளது. இதனால் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்போடு வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து யாரேனும் வந்திருந்தால் அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார். மேலும், “கடலூர் மாவட்டத்தில் நாளை (03.05.2020) முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும், மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.
இதனிடையே கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி நெய்வேலி நகரியம் முழுவதும் நாளை (03.05.2020) ஞாயிற்றுகிழமை ஒரு நாள் மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும், மீறும் கடை உரிமைதாரர்கள் மீது கடை உரிமம் ரத்து மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் கொள்ளை நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் என்.எல்.சி நகர நிர்வாகம் எச்சரித்துள்ளது.