Skip to main content

தமிழ்நாடு அரசு பேருந்து மோதி உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு 1.94 கோடி இழப்பீடு...

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
cuddalore district court

 

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்த புதுவை ஆசிரியர் குடும்பத்திற்கு 1.94 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் ஆசிரியர் ஒபிலியன் (45). இவர்  புதுச்சேரி முதலியார்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017 பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை -கும்பகோணம் சாலையில் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் மாவட்டம், வடலூர் அருகிலுள்ள மருவாய் தரைப்பாலம் அருகில் அவரது கார் சென்றபோது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆசிரியர் ஒபிலியன் உயிரிழந்தார்.

 

அவரது இறப்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது குடும்பத்தினர் கடலூர் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கு தொடர்ந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது தொடர்ப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருதய ராணி, இறந்த ஆசிரியர் ஒபிலியன் குடும்பத்திற்கு ஒரு கோடியே 94 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் அவர் அந்த தீர்ப்பில் இந்த இழப்பீடு தொகையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 50 சதவீதமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி 50 சதவீதமும் பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டுமாறு தீர்ப்பில் கூறியுள்ளார் இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சிவமணி சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்