கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. விருத்தாசலம் நகராட்சி 30 ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலரான இவர் சக்தி நகரில் வைத்தியலிங்கா நர்சரி & பிரைமரி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் புதுப்பேட்டை பகுதி, தேசிங்கு ராஜா நகரில் வசிக்கக் கூடிய ஜோசப் - சுகன்யா தம்பதியினரின் மகளான 6 வயது கொண்ட சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. வலியால் துடித்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்த தகவல் கூறியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்த தகவலறிந்த விருத்தாச்சலம் மகளிர் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வைத்தியலிங்கா நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளரும் தி.மு.க கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்கிரிசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பக்கிரிசாமி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். 6 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவமும் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.