கடந்த ஒரு மாதமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விடாது பெய்துவரும் மழையினால் ஏரிகள், குளங்கள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு பக்கம் இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறுபக்கம் வேதனை. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் முன் பட்டத்தில் பயிர் செய்யப்பட்ட பருத்தி, சோளம், உளுந்து, நெற்பயிர் ஆகியவை தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டன.
வரும் காலங்களில், விவசாயத்திற்குத் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது என்றாலும்கூட, பயிர் செய்யப்பட்ட பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்ய முடியாமல் அழுகி நாசமாகிவிட்டன. விவசாயிகள், வேதனையில் அரசாங்கத்திடம் கையேந்தி காத்திருக்கிறார்கள். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட உளுந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.
இந்த நேரத்தில், விடாது பெய்துவரும் மழையினால் நிலத்திலேயே பயிர்கள் முளைத்துவிட்டன. இதுகுறித்து குன்னத்தூர் விவசாயி வையாபுரி நம்மிடம், “எனது 6 ஏக்கர் நிலத்தில் உளுந்து விவசாயம் செய்திருந்தேன். அறுவடை செய்ய இருந்த நேரத்தில் விடாத மழையினால் விளைந்த உளுந்து, நிலத்திலேயே முளைவிட்டுவிட்டன. ஒருபடி கூடத் தேராது; இதனால் எனக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்.
அரசு அதிகாரிகள், வேளாண்மைத் துறையினர் வந்து பார்வையிட்டு கணக்கு எடுத்துச் சென்றனர். அதேபோன்று பயிர் இன்சூரன்ஸ் செய்து இருக்கிறோம். ஆனால், அரசு உதவித்தொகை, இன்சூரன்ஸ் தொகை என்று இதுவரை எதுவும் கைக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக வறட்சி, விவசாயம் செய்ய முடியாமல் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட்டோம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், விவசாயம்செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று ஊருக்கு வந்து, விவசாயத்தில் ஈடுபட்டோம். ஆனால், விடாது பெய்த மழை எங்களை நஷ்டப் படித்திவிட்டது.
பல ஆண்டுகளாகக் காஞ்சு கெடுத்துச்சு, இந்த ஆண்டு மழை பேஞ்சு கெடுத்துடுச்சு. ஒரு மாதமாக சூரிய வெயில் கண்ணுக்குத் தெரியவில்லை. வெயில் படாததால் விளை பயிர்கள் முற்றவில்லை. வெயில் பட்டால்தான் தானியங்கள் முற்றும். இது மட்டுமல்ல பயிர் செய்யப்பட்ட காய்கறிகள் அனைத்தும் பிஞ்சிலேயே வெம்பிவிட்டன. வெயில் பட்டால்தான் காய்கறி செடிகளின் வேரில் சூடு ஏறி காய்கறிகள் பெருக்கும். அப்போதுதான் அறுவடை செய்ய முடியும்.
விளைச்சல் நஷ்டமானதால் தானியங்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை அதிகரிக்க உள்ளது. அதேபோல், காய்கறி விலையும் அதிகரிக்கப் போகிறது. சீரான மழை, சீரான வெயில் இதுவே விவசாயத்தைக் காப்பாற்றும். அதிக வறட்சி, அதிக மழை இரண்டுமே எங்களை நசுக்குகிறது; நாசம் ஆக்குகிறது” என்றார்.