சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார், சிறையிலேயே இறந்துவிட்டார் என சிறைத்துறை மருத்துவர் கொடுத்த அறிக்கை, ராம்குமார் மரணத்தில் இருக்கும் மர்மங்களை அதிகரித்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வாதி. இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணியாற்றிவந்தார். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 06.35 மணிக்கு வேலைக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த சுவாதி, ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில், சுவாதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் சுவாதி.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது. இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ராம்குமாரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் கைது செய்யச் சென்றபோது, ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அந்தக் காதலை சுவாதி ஏற்றுக்கொள்ளாததால் அவரை ராம்குமார் கொலை செய்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுவாதி கொலையில் ஆரம்பம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த நிலையில்தான், கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, சிறையில் மின்சார வயரைக் கடித்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், என் மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என ராம்குமாரின் தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
வழக்கு விசாரணை ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அப்போது, மனித உரிமை ஆணையத்தில் ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போரட் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ராம்குமாரின் மரண வழக்கில் தொடர்புடைய சிறைத் துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு, ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அத்துடன், ராம்குமாரின் மூளை, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வில், ராம்குமார் மின்சாரம் தாக்கிதான் இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இது இந்த வழக்கில், மிகப்பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 23/2021 அன்று, மனித உரிமை ஆணையத்தில், ராம்குமார் உடலை போஸ்ட் மார்டம் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறை மருத்துவர் நவீன் ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ராம்குமாரின் உடலில் 4 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரி கூறியிருந்த நிலையில், காயங்கள் ஏதும் இல்லை. மேல் உதட்டில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்று பிரேதப் பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டரா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த சிறை மருத்துவர் நவீன், ராம்குமாருக்கு இதயத்துடிப்பு இல்லாததால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஜி.எச்.க்கு அனுப்பி வைத்ததாக கூறினார். மேலும், ஈ.சி.ஜி எடுத்த பிறகே இறந்ததாக கூறமுடியும் என்பதால், இதயத்துடிப்பு நின்றுவிட்டது எனக் கேள்விக்குறியுடன் சான்று வழங்கியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கின் மேல்விசாரணை, வருகிற டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராம்குமார் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழக் காத்திருக்கிறது.