Skip to main content

ஆய்வகத்தில் இருந்த அமிலத்தால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

cuddalore chidambaram aided school student lab incident he admitted in icu 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் சத்தார் மகன் முகமது பாரூக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் மின்விசிறி பழுதானதால் ஆசிரியர் மாணவர்களை அருகில் உள்ள ஆய்வகத்தில் அமர வைத்துள்ளார். அப்போது மாணவன் தொடையில் ஏதோ அமிலம் பட்டு அரிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் ஒருவர் மாணவனைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டு வரக் கூறியுள்ளார்.

 

இதை தொடர்ந்து அவர் வகுப்பில் இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது மாலை 6 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனடியாக மாணவனை சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவனின் உடலில் பட்ட அமிலமானது சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ளதாகத் தெரிவித்ததோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், "மாணவன் வகுப்பறையில் அமிலம் பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியவுடன் ஆசிரியர் தண்ணீரைக் கொண்டு கழுவி விட்டு வரக் கூறியுள்ளார். பின்னர் மாணவனும் கழுவி விட்டு, தொடர்ந்து இரண்டு பாட வகுப்புகளைக் கவனித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தகவல் கேள்விப்பட்டு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 2 நாட்களாக மருத்துவமனையில் உள்ளோம்" என்றார்.

 

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கடலூர் மண்டல செயலாளருமான ஹமீத் பரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளியில் சரியான பராமரிப்பு செய்யப்படுகிறதா எனக் கவனம் செலுத்தாத நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே இந்த சம்பவத்திற்கு காரணம். மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்குப் போராடி வரும் மாணவனின் உயிரைக் காப்பாற்ற உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்