Skip to main content

கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு 
கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு



விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
’’மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவமதிக்கும் விதமாகவும்ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி வரும் ஆளுநரின் நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆளுநர் தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். நாளை கடலூர் மாவட்டத்தில் அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகார வரம்பு மீறிய இந்தச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பைத்தெரிவிக்கும் விதமாக கடலூருக்கு வரும் ஆளுநருக்கு அமைதியான முறையில் கறுப்புக் கொடி காட்டப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓக்கி புயலால் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் இறந்து போயிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.  பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசும் தமிழக மக்களும் வலியுறுத்தியும் கூட இதுவரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழக அரசுக்கு உதவவும் முன்வரவில்லை. இந்நிலையில் தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விதமாக ஆளுநர் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. 

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது. இதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக ஆளுநர் நடந்துகொள்வது இந்திய ஜனநாயகத்தையே கேலி செய்வதாக இருக்கிறது.

 தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பை உணர்ந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வரம்புமீறி நடந்துகொள்ளும் ஆளுநரின் போக்கை அனைத்து கட்சிகளும் கண்டிக்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். ’’


சார்ந்த செய்திகள்