![Cruelty by asking to drink urine; Three arrested in Nagai](http://image.nakkheeran.in/cdn/farfuture/lJLRLWhz0s7STPME5U6_uJZMw16GBlw8TLbpQ2oqyMM/1686548617/sites/default/files/inline-images/we28.jpg)
உறவினர் துபாயிலிருந்து கொடுத்து அனுப்பிய பொருட்களைக் கேட்டு இளைஞர் ஒருவரிடம் தாக்குதல் நடத்திய கும்பல், இளைஞரை சிறுநீர் குடிக்கும் படி கொடுமைப்படுத்திய சம்பவம் நாகப்பட்டினத்தில் நிகழ்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிவன். துபாயில் வேலை பார்த்து வந்த சந்தோஷ் சிவன் அண்மையில் துபாயிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வாசீம் என்பவர் துபாயிலிருந்து தங்களது உறவினர்களிடம் கொடுக்கும்படி சில பொருட்களை சந்தோஷ் சிவனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். சென்னை வந்த சந்தோஷ் சிவனின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது வாசீம் கொடுத்தனுப்பிய பொருளில் 400 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது. அதைக் கைப்பற்றிய அதிகாரிகள் வரி செலுத்துமாறு கூறி ரசீதை கொடுத்துள்ளனர். இதனால் பொருட்களை விட்டுவிட்டு சந்தோஷ் வந்துள்ளார்.
வாசீம் தங்களுக்காக கொடுத்தனுப்பிய பொருட்களை ஒப்படைக்குமாறு சந்தோஷ் சிவனிடம் வாசீமின் உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் நடந்ததை சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஒப்புக் கொள்ளாத வாசீமின் உறவினர்கள், அவரை கடத்திச் சென்று தனியறையில் பூட்டி வைத்து தாக்கியுள்ளனர். மேலும் சிறுநீரை உட்கொள்ளும்படி அவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவரிடம் இருந்த கைப்பேசி, மோதிரம் போன்றவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சந்தோஷ் சிவன் கொடுத்த புகாரில் யூஸப் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.