கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதா? எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதா? அடித்தட்டு மக்களை பாதிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளலாம் என, கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் கச்சா எண்ணெய் விலை 52.49 டாலர்/பேரல் ஆக இருந்த போது பெட்ரோல் விலை ரூ.62 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் தினந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் விலையை நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் முதல் தற்போது வரை சப்தமில்லாமல் ரூ.11 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் விலை உயர்த்தப்படும் என அரசு கூறிய நிலையில், கடந்த ஏப்ரல் மாத விலையை விட 5 டாலர் வரை கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள போதும், எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைப்பிற்கு பதிலாக விலையை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அடித்தட்டு மக்களை பாதிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரியும் போதெல்லாம், அதிகரிக்கப்பட்ட எண்ணெய் விலையை குறைத்து அதன் பலனை மக்கள் அனுபவிப்பதை எண்ணெய் நிறுவனங்கள் விரும்பாத அதே நேரத்தில், மத்திய அரசும் விலை சரிவுக்கு சமமான அளவில் கலால் வரியை சத்தமில்லாமல் உயர்த்திக்கொண்டே வருகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் எரிபொருட்கள் மீதான கலால் வரி 11 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டீசல் மீதான கலால் வரியை 380 சதவீதமும், பெட்ரோல் மீதான கலால் வரியை 120 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது.
இதனால், உயர்த்தப்பட்ட எண்ணெய் விலை மற்றும் அதிகரிக்கப்பட்ட கலால் வரியால் சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள்களுக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து கோரி வருகிறது.
முன்னர் காங்கிரஸ் தலைமையிலான கடந்த மத்திய ஆட்சியில், எரிபொருள்களுக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், விலை நிர்ணயம் செய்கின்ற உரிமையினை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்ப பெற முயற்சிக்காத மத்திய பாஜக அரசு, மென்மேலும் சலுகைகளை அளித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சேவகம் செய்து வருகின்றது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணங்காட்டி வரைமுறை இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தி வந்த நிலையில், தற்போது தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் அனுமதியால் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணம் உயர்வதோடு அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து ஏழை, எளிய மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் சூழலில், மத்திய பா.ஜ.க. அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படவில்லை. வாகனம் வைத்திருப்பவர்கள் பட்டினி கிடப்பவர்கள் அல்ல.’ என்ற அறிவுக்கு பொருந்தாத வகையில் எண்ணெய் விலை உயர்வை நியாப்படுத்தி பேசுகிறார். எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வு இறுதியில் நடுத்தர, ஏழை மக்களை கடுமையான முறையில் பாதிக்கும் என்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் மத்திய அமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல.
ஆகவே, அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் வகையில் தினந்தோறும் விலையை மாற்றியமைக்கும் முறையை ரத்து செய்வதோடு, எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.