நாகப்பட்டினம் பகுதியில் கரோனா அச்சத்தின் காரணமாக வியாபாரிகள் கடைகளைப் பூட்டி வைத்திருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
நாகை மாவட்டத்தில் இதுவரை 38 நபருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த நாகப்பட்டினம் அருகே உள்ள திருப்பூண்டி நகரத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் வர்த்தகர்களே மூடியுள்ளனர். இக்கடைகளுக்குப் பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, காரைப்பிடாகை, சிந்தாமணி, மேல பிடாகை உள்ளிட்ட நாற்பது கிராமங்களில் இருந்து அங்கு வந்தே அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பயன்பெற்று வந்தனர்.
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால், நோய்த் தொற்று ஏற்படும் என்கிற அச்சம் வர்த்தகர்களுக்கே உண்டானதாலும், மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்துக்கொண்டு வரும் காரணத்தாலும் கடைகளை அடைக்க வர்த்தகர்களே முடிவு செய்து அடைத்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தோடு வர்த்தகர்களும் இணைந்து இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.