இன்று (29/04/2021) கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபத்தில் இருந்து திருவட்டார் நோக்கி நகர அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் திருவட்டார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மற்றும் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் இருவரும் பயணம் செய்துள்ளனர். பேருந்து கிளம்பி ஜங்சன் நிறுத்தத்தில் நின்றபோது, பேருந்துக்குள் காகம் ஒன்று புகுந்தது. வழக்கமாக ஆள் நடமாட்டம் இருந்தால் பறந்து செல்லும் தன்மைகொண்ட காகம், பேருந்து இருக்கை கம்பியில் அமர்ந்தது.
மீண்டும் பேருந்து புறப்பட்டபோதும் அதைப் பொருட்படுத்தாத காகம், இருக்கையின் கம்பியில் இருந்து ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து பேருந்தின் வேகத்திற்கும் காற்றின் வேகத்திற்கும் ஈடுகொடுத்து, சாலையை வேடிக்கை பார்த்தபடியே பயணத்தை மேற்கொண்டது. பல நிறுத்தங்களில் பேருந்து நின்று சென்றபோதும், அந்தக் காகம் பேருந்தில் இருந்து பறந்து செல்லாமல், சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
மேலும், இந்த வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.