சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேடை பேசிய அவர், ''மு.க.ஸ்டாலின் அவர் செய்த சாதனையை நம்பி மக்களை சந்திக்கவில்லை. திமுகவின் சாதனையை நம்பி அவர்கள் தேர்தலில் நிற்பதாக தெரியவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் அவர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள். அதன் மூலமாகத்தான் வெற்றி பெறுவதாக எல்லா கூட்டத்திலும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் பேசவில்லை அவர்தான் பேசுகிறார்.
எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி; எங்கள் கூட்டணியில் விவாதங்கள் இருக்கும் பிரிவு இருக்காது என்றும் முதலமைச்சர் பேசுகிறார். கிராமத்தில் சொல்பவர்கள் 'எங்க அப்பன் குதிருக்குள் இல்ல' என்று இப்படித்தான் திமுக தலைவர் பேசி வருகிறார். கூட்டணி வலுவாக இருக்கிறது வலுவாக இருக்கிறது என பேசி வருகிறார்கள். அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் திமுக அரசின் ஆட்சியைக் கடந்த 41 மாதமாக விமர்சனம் வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தானே அர்த்தம். அப்படித்தானே புரிந்து கொள்ள முடியும். அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை பொறுத்தவரை தலைமை அலுவலகம் அறிவித்தது போல் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் உரிமை சீட்டுகளை புதுப்பித்தல்; புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பணியில் செயல்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இன்றைக்கு தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் இருக்கிறது''என்றார்.