வளையமாதேவி மற்றும் கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில், என்எல்சி நிறுவனம் விவசாயிகளின் நெற்பயிரை அழித்து வாய்க்கால் அமைக்கும் இடத்தில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ஆகியோரை சேத்தியாதோப்பு கூட்டு ரோடு அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனைக் கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாகை மாலி, “நெற்பயிரை அழித்த சம்பவத்தைக் கண்டிப்பதாகவும், விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற எங்களைத் தடுத்தது கண்டிக்கத்தக்கது. எனவே என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.