Skip to main content

’’3 மாத காலத்திற்கு இவைகள் அனைத்தையும் தள்ளி வைக்க வேண்டும்’’- முதல்வருக்கு சிபிஎம் வைக்கும் கோரிக்கை !

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  கடிதம் எழுதியுள்ளார் .  அதில்,  ‘’கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ச்


 

வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை என்பதைப் பொது மக்களுக்கு எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் விளக்கிக் கூறி வருகிறோம். அதேசமயம், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே வாழ்வதற்கான பொருளாதார உதவிகளை அரசு வழங்கினால் மட்டுமே மக்களைப் பாதுகாக்க முடியும் என்பதனை தாங்கள் அறிவீர்கள்.

 

தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் தாங்கள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் வரவேற்கத்தக்கவை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அறிவிப்பு பிரதமர் ஏப்.21-ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவிப்பதற்கு முந்தைய நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தாங்கள் அறிவித்தது. தற்போது 3 வாரங்கள் நீட்டித்திருக்கும் நிலையில் அதற்கேற்ற பொருளாதார உதவிகளைத் தேவைப்படும் மக்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.


கீழ்க்கண்டவற்றையும் பரிசீலித்து சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். 

 

http://onelink.to/nknapp



குறிப்பாகச் சென்னையிலும், மாநிலம் முழுவதும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், உள்ளுறை மருத்துவர் (House Surgeon), முதுகலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசம் மற்றும் உபகரணங்களைத் தாமதமின்றி வழங்கிட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு தங்கள் வீடுகளிலிருந்து பணியிடங்களுக்குச் செல்லவும், திரும்ப வீடுகளுக்குச் செல்வதற்கும் உரிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். 


மாநிலம் முழுவதும் அனைத்து அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், குடிநீர் வழங்கும் பணியாளர்கள், நியாய விலைக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு மாதச் சம்பளத்தை நிவாரணமாக வழங்கிட  வேண்டும்.

 

மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, ரேசன் பொருட்களை வீடு வீடாகச்  சென்று வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.  பொது மக்களுக்கும் முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கிட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் நெருக்கடியான குடிசைகளில் வாழும் மக்களை அவர்களுக்கு அருகிலுள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தங்க வைத்து உணவு வழங்கிட வேண்டும்.
 

வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாக ஒரு இடத்தில் தங்கியிருப்பதைத் தவிற்பதற்கு அருகிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தங்க வைத்து உணவு வழங்கிட வேண்டும்.
 

முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

 

நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன்களை 6 மாத காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டுமெனவும், இந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் கடன் வசூலைத் தள்ளி வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

 

ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கிட வேண்டும்.

 

மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம், கடன் தவணைகள், இன்சூரன்ஸ் தவணைகள், கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவைகளைச் செலுத்துவது சாத்தியமில்லை என்பதால் ஒரு 3 மாத காலத்திற்கு இவைகள் அனைத்தையும் தள்ளி வைக்க வேண்டும்.
 

ஆட்டோ, டாக்சி, வேன் போன்ற சுய வேலைவாய்புகளுக்குப் பயன்படுத்துகிற வாகனங்களில் இந்த 3 மாத காலத்தில் எப்சி-களுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும்.
 

கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் ‘வேலை அட்டை’ வாங்கியுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் 5 நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்கிட வேண்டும். இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பள பாக்கித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்தச் சம்பள பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுப்பதுடன் மத்திய அரசையும் வற்புறுத்திட வேண்டுகிறோம்.
 
கடந்த காலத்தில் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய அரசு மருத்துவர்கள் பலர் பல்வேறு இடங்களுக்குப் பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு மருத்துவர்கள் (Specialists) மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்களாக உள்ளார்கள். இவர்களது சேவை அத்தியாவசியமானதாக உள்ளதால் இவர்கள் மீதான பணி மாறுதல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்து அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த இடங்களில் பணியிலமர்த்தக் கேட்டுக் கொள்கிறோம்.


மக்கள் வீட்டிலேயே இருப்பதால் தண்ணீர்  தேவை அதிகரித்துள்ளது. எனவே, மெட்ரோ லாரிகள் மூலம் தண்ணீர் தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்’’என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்