
ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதி முழுமையாக வழங்க வலியுறுத்தியும் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம புயல் காரணமாக பெய்த பெருமழையால், தலைநகர் சென்னையும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய ஒன்றிய அரசு, மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் பெய்த பெருமழையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகர தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி மக்கள் வாழும் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் கோரியுள்ள ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதை, வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது.
மத்தியக் குழு விரிவாக பயணம் செய்து, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றுள்ளார். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். இவ்வளவுக்கும் பிறகு இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தி 08.01.2024 திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.