விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் ராதாபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக விவசாய வேலைக்குச் சென்றவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விக்கிரவாண்டி போலீசார் அந்த வயல் பகுதிக்குச் சென்று இறந்து கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் விழுப்புரம் நகரத்தை ஒட்டி உள்ள வி. மருதூர் என்ற ஊரைச் சேர்ந்த 55 வயது முருகன் என்பதும், மாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தும் இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது. அவர் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில் மற்றும் செருப்புகள் கிடந்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த நபர் யாருடன் கடைசியாக செல்போனில் பேசியுள்ளார் என்று விசாரணை நடத்தினர். அதில், அதே மருதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற 20 வயது வாலிபர் என்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் சரவணனை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் முதியவர் முருகனை அடித்துக் கொலை செய்ததை சரவணன் ஒப்புக் கொண்டுள்ளார்.
முருகனைக் கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "மாடுகள் மேய்த்து அதை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் முருகன் சமீபத்தில் ஒரு மாட்டை 16 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தை அவரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதற்காக முருகனுக்கு இலவசமாக மது வாங்கித் தருவதாக ஆசை காட்டி அவரை ஒரத்தூர் ராதாபுரம் வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்து குடிக்க வைத்தேன். அவருக்கு போதை ஏறியதும் தடியால் அவர் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தைப் பறித்துச் சென்றதாக" வாக்குமூலம் அளித்துள்ளார் சரவணன்.
இதையடுத்து போலீசார் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். மாடு மேய்த்து தொழில் செய்யும் ஒருவரிடமிருந்து 16,000 பணத்திற்காக ஒரு கொலை செய்த வாலிபரின் செயல் விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.