தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,345 ஆகவும் ஜூலை மாதத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆகவும் உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக 317 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,345 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று வரை 5,024 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுநர், ஆய்வக தொழில் நுட்பனர், கிராம செவிலியர், நர்சிங் மாணவி, இரண்டு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர், தூய்மை பணியாளர் தேவாரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், போடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு செவிலியர்கள், கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், பைக்கில் திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு வந்த ஒருவர், ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்திருந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 8 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மையம் மூடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 43 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மே மாதத்தில் 66 பேருக்கும் ஜூன் மாதத்தில் 593 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில், ஜூலை 1 முதல் நேற்று வரை ஒரே மாதத்தில் 4,326 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு இன்று புதிதாக 317 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,345 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,786 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,497 பேர் சிகிச்சையில் உள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொம்மிநாயக்கன்பட்டி சேர்ந்த 27 வயது முதியவர், கோவில்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர், கம்பத்தை சேர்ந்த 82 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் தேனி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
மே மற்றும் ஜூன் மாதத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் 90 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 93 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் பரிசோதனை முடிவு வெளிவரும் முன்பே கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இப்படி நாளுக்கு நாள் கரோனாவால் தேனி மாவட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.