கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஐ.எஸ். ஆதரவு மனநிலையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் தொடர் செயல்பாட்டை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக கோவையில் 200 பேர் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த தொடர் கண்காணிப்பு குறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கையில், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். அதிலும் குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதில் ஐ.எஸ். கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்கள் என 200 பேரைக் கண்டறிந்துள்ளோம்.
இவர்களில் படிக்காதவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என பல்வேறு தரப்பினரும் உள்ளனர். இந்த கண்காணிப்பு மூலம் அவர்களின் அன்றாட செயல்பாடுகள், செல்போன் அழைப்புகள், தினசரி சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் கண்காணித்து பதிவு செய்யப்பட உள்ளன. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் பதிவிடுதல், சர்ச்சைக்குரிய தகவல்கள் பரிமாறப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.