Skip to main content

திருமணத்தை மீறிய உறவு! பெண்ணை கொன்றவருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Court verdict life sentence to 45 years old man

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலைக்கு பெங்களூரு சென்று, அங்குள்ள சாம்ராஜ் நகர் பகுதியில் வேலை செய்து பிழைத்து வந்தார். அப்போது ஸ்வேதா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்து அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது அவர்கள் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு ஸ்வேதாவை தனது சொந்த ஊருக்கு சுபாஷ் அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் கணவன் மனைவி போல ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

 

அவர்கள் இருவருக்கும் இரவு நேரங்களில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இரவு இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த சுபாஷ், அருகில் இருந்த உருட்டுக்கட்டை எடுத்து ஸ்வேதா தலையில் அடித்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே ஸ்வேதா உயிரிழந்தார். இதுதொடர்பாக அந்த கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷை கைது செய்தனர்.

 

இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில் ஸ்வேதாவை கொலை செய்த குற்றத்திற்காக சுபாஷுக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுபாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்