அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்தும் பதில் வாதம் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜரானர். அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.