திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் நாளை ( நவம்பர் 23ந்தேதி ) ஏற்றப்படவுள்ளது. விடியற்காலை 4 மணிக்கு கோயிலுக்குள் மகாதீபமும், மாலை 6 மணிக்கு 2660 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் கோயில் வளாகத்தில் அண்ணாமலையார் சன்னதியில் இருந்து அர்த்தநாதீஸ்வரர் கொடிமரம் அருகே வருவார். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கோயிலுக்குள் இருந்து வெளியே வரும் அர்த்தநாதீஸ்வரர் ஒரு நிமிடம் மட்டும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை பார்த்துவிட்டு சன்னதிக்கு சென்றுவிடுவார். இது காலம் காலமாக உள்ள நடைமுறை.
இந்த அர்த்தநாதீஸ்வரரை தரிசிக்கவே அனைவரும் விரும்புவர். இதற்காக கோயிலுக்குள் மகாதீபத்தின்போது 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிப்பது வழக்கம். கடந்த காலங்களில் யார் வேண்டுமானாலும் முன்னாடி சென்று இடம் பிடித்து தரிசிக்கலாம் என்ற நிலைமாறி கடந்த 25 ஆண்டுகளாக பெரும் கெடிபிடி தொடங்கியுள்ளது. அதிகார வர்க்கத்தினர், பணம் படைத்தவர்கள் மட்டுமே மகாதீபத்தன்று கோயிலுக்குள் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இலவச பாஸ், வி.ஐ.பி பாஸ் போன்றவை ரத்து செய்யப்பட்டபின், கட்டளைதாரர் பாஸ், உபயதாரர் பாஸ் போன்றவற்றை பெற பெரும் போராட்டமே நடக்கிறது. கட்டளைதாரர், உபயதாரர் யார் என்கிற பட்டியல் கோயில் நிர்வாகத்திடம் இருந்தாலும், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த இந்த இரண்டு வகையான பாஸ்களை கூடுதலாக அச்சடித்து அனைத்து தரப்பினருக்கும் தந்துவருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக யாருக்கு, எத்தனை பாஸ் வழங்குவது என்கிற பஞ்சாயத்து நடந்துவருகிறது. நவம்பர் 21ந்தேதி அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் திருவிழா மலரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் கோயில் ஜே.சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் தெற்கு மா.செ ராஜனும் சென்றார். அவருக்கு பரணி தீபம் பாஸ் 150, மகாதீபம் பாஸ் 300 கவரில் போட்டு தந்தார் அமைச்சர். இதை வச்சிக்கிட்டு என்னப்பண்றது. எனக்கு ஆயிரம் பாஸ் வேணும் என அமைச்சரிடம் எகிறினார்.
அவ்வளவுயெல்லாம் தரமுடியாது என அமைச்சர் பதில் பேச, நாங்க உள்ளூர்க்காரங்க, எங்களுக்கு கோயில் முக்கியம். வெளியில இருந்து வர்ற எவன், எவனோ கோயிலுக்குள்ள உட்கார்ந்து சாமி பார்ப்பான், உள்ளூர்க்காரனான நாங்க வெளியில நிக்கனுமா என எகிறினார். சுமார் 30 நிமிடத்துக்கு மேல் இந்த தகராறு நடைபெற்றது. இறுதியில் 500 பாஸ்கள் வழங்கி பிரச்சனையை முடித்தனர் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.
ஒரு பாஸ் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்கிறார்கள் கோயில் ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் சிலர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.