“ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கம். ஆர்.எஸ்.எஸ் எங்கெல்லாம் நுழைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் வன்முறை நிகழ்ந்துள்ளது” என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை முடிவு செய்ய வேண்டியது மாநில அரசாங்கம் தான். நீதி மன்றத்திற்கு ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு எவ்வாறு இருக்கும் என சொல்லத் தெரியாது. நாளைக்கு எதேனும் பிரச்சனை நடந்தால் நீதிமன்றம் எளிதாக தப்பித்து விடும். மாநில அரசு சட்ட ஒழுங்கை காப்பாற்றி இருக்க வேண்டும் என சொல்லும். எனவே இந்த விசயத்தில் நீதிமன்றம் முடிவு செய்வதை விட மாநில அரசு தான் சட்ட ஒழுங்கை பாதுகப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கம். ஆர்.எஸ்.எஸ் எங்கெல்லாம் நுழைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் வன்முறை நிகழ்ந்துள்ளது. மகாத்மா காந்தி கொலைக்கு கூட அந்த வன்முறை காரணமாக அமைந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு அதனால் தான் ஏற்பட்டது. குஜராதிலும் உத்திர பிரதேசத்திலும் நடைபெற்ற கலவரங்கள் அதனால் நடைபெற்ற கலவரங்கள் தான். மசூதியை இடிக்க மாட்டோம் என அவர்கள் உத்திரவாதம் அளித்தார்கள். அந்த உத்திரவாதத்தை நம்பி அன்றைய அரசு அவர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் நிகழ்ந்தது என்ன? ஒரு இறைவழிபாட்டுத் தளம் நசுக்கப்பட்டது. அதே போல் தான் இன்றும் நீதிமன்றம் உத்திரவாதம் அளித்துள்ளார்கள். ஆனால் அதை மாநில அரசு நம்பக்கூடாது. மாநில அரசு அதை தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.