கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாகப் பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா என்பவர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தேடி வந்த நிலையில், மதுரையில் தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பொன்னையா கடந்த மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி 'சிறுபான்மையினர் உரிமை மீட்பு' என்ற பெயரில் அருமனையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து கடவுள்கள், பிரதமர், தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசிய நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து குழித்துறை நீதிமன்றத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. தன் மீது பதியப்பட்ட வழக்கின் எஃப்ஐஆர் நகல் இதுவரை கிடைக்காததால் தான் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டிருந்தார் பொன்னையா. இந்நிலையில் அவருக்கு வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.