Skip to main content

அரசு வேலை வேண்டுமா? - ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி 

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Couple arrested for defrauding rs 1 crore rupees by claiming get government jobs

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழுப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(61). இவர் தனது நண்பர் ரஜினி என்பவர் மூலம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த புரட்சிக்கதிர் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் நண்பராகியுள்ளனர். இருவரும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், ஒருநாள் புரட்சிக்கதிர், அன்பழகனிடம், “எனக்குத் தெரிந்த நேந்திரம் கிள்ளைப்பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அதனால் அவருக்கு உயர் அதிகாரிகளின் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதன் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளார். உனக்கு தெரிந்தவர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் வேலை வாங்கிக் கொடுப்பார். தீனதயாளன் வடலூரில் ஜெயம் என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் பலரைத் தயார் செய்து அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது” இப்படி தீனதயாளன் பற்றி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து கூறி அன்பழகனுக்கு ஆசை வலையை விரித்துள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து புரட்சிக்கதிரின் ஆசை வார்த்தைகளை நம்பிய அன்பழகன், தனது மகன் வினோத்திற்கு மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளர் வேலை வாங்கித் தருமாறு புரட்சிக்கதிர் மூலம் தீனதயாளனைச் சந்தித்துக் கேட்டுள்ளார். தீனதயாளன், 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலை கண்டிப்பாக மின்வாரியத்தில் கிடைக்கும். அதை நான் உறுதியாக வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து தீனதயாளனிடம், மகன் வினோத்துடன் சேர்ந்து, மகள் வித்தியாவிற்கு ஆசிரியர் வேலை என அவரது குடும்பத்தினரின் வேலை வாய்ப்புக்காக மொத்தமாக 55 லட்சம் ரூபாய் பணத்தை தீனதயாளன் மற்றும் அவரது மனைவி உஷா ஆகிய இருவரிடம் அன்பழகன் கொடுத்துள்ளார். இதையடுத்து சில மாதங்களில் புரட்சிக்கதிர் அரசு பணிகளுக்கான உத்தரவைப் போலியாகத் தயாரித்து அதை அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவை எடுத்துக்கொண்டு வேலையில் சேர முயற்சி செய்தபோதுதான் மோசடி விவகாரம் குறித்து  தெரியவந்தது. 

 

இது தொடர்பாக அன்பழகன், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் சென்று புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார், தீனதயாளன் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீனதயாளனும் அவரது மனைவி உஷாவும் இணைந்து புவனகிரியைச் சேர்ந்த இளந்தமிழன் என்பவரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக 13 லட்சமும், சிதம்பரம் வட்டம் அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகா சங்கு என்பவரிடம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சமும், அவரது மனைவி விமலா ரமணி என்பவரிடம் வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சமும், சுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.5 லட்சமும், மழவராயநல்லூரைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரிடம் ரூ.4 லட்சமும், ரூபா என்பவரிடம் ரூ.6 லட்சம் என  இப்படி அரசு வேலை வாங்கித் தருவதாக தீனதயாளனும் அவரது மனைவி உஷாவும் இணைந்து பலரிடமும் ஆசை வார்த்தை கூறி போலியான வேலை உத்தரவு வழங்கியும் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பணம் பறித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்