
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் ட்ரோன் கேம்ரா மூலம், கல்வராயன்மலையில் மதுவிலக்கு சம்பந்தமாக அதிரடி சோதனை செய்து கள்ளச்சாராய ஊரலை. அழித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை மலைவாழ் பகுதியிலும் மற்றும் மலையின் கீழ் உள்ள கிராமங்களிலும் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன்மலை முழுவதும் கள்ளச்சாராயம் ஊரல்களை அழிப்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது, கள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 09ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமையில் சென்ற சிறப்புபடையினர் ட்ரோன் கேம்ராவை பயன்படுத்தி கல்வராயன்மலை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கல்வராயன்மலை எருக்கம்பட்டு கிராம ஓடையில் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 15 பேரல்களில் சுமார் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் கொடுந்துரை ஓடையில் லாரி டியூப்பில் 350 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபாவதி தலைமையில் சென்ற சிறப்பு படையினர் நீலம்பள்ளம் ஏரிக்கரை அருகே முத்து தந்தை பெயர் வெங்கட்டான் என்பவருக்கு சொந்தமான ஒரு சின்டக்ஸ் டேங்கில் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 2 லாரி டியூப்பில் 60 லிட்டர் கள்ளச்சாராயமும் கைப்பற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இன்று இதுவரை கல்வராயன்மலையில் சுமார் 3400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களும், 410 லிட்டர், கள்ளச்சராயமும் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்கள் உணர்ந்து அதனை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அல்லது அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.