"நல்லநேரம், குயில், குமரன், தங்கம்," இப்படி கவர்ச்சிகரமான பெயர்களில் மூன்றுசீட்டு லாட்டரி சீட்டுகளின் விற்பனை மீண்டும் டெல்டா மாவட்டங்களில் அமோகமாக துவங்கியிருக்கிறது.
ஏழைகளையும், நடுத்தர குடும்பத்தினரையும் குறிவைத்து அவர்களின் குரல்வளையை நெறிக்கும் இருகரங்களில் ஒன்று கந்துவட்டி எனும் நரகக் கொடுமையும் மற்றொன்று கள்ளலாட்டரி சீட்டு எனும் போதையும் தான், இதனுடைய பாதிப்பை உணர்ந்து தடுக்க சட்டம் வந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து, சில காக்கிகளின் முழு ஆதரவோடு திரைமறைவில் இன்னும் ஜரூராக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
இதனால் தினசரி உணவுக்கே வழியில்லாத பல குடும்பங்கள் வீதிக்கு வந்திருப்பதையும், பிள்ளைகள் ஒரு பக்கம், பெற்றவர்கள் இருபக்கம் என பிரிந்து தவிக்கும் பல குடும்பங்களும் கிராமங்களில் இருக்கின்றனர், இன்னும் ஒருபடி மேலே சென்று, விழுப்புரம் மாவட்டம் சித்தேரிகரையைச் சேர்ந்த நகைசெய்யும் கூலித்தொழிலாளி மனைவி, குழந்தைகளோடு சயணைடு சாப்பிட்டு அணு அணுவாக இறந்ததை மனிதம் மனமுடைய யாராலும் மறந்து கடந்துவிடமுடியாது, அதேபோல பல குடும்பங்கள் வெளியில் தெரியாமலேயே இதில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் ஏராளம்.
"தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது," என்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. அமைச்சர் ஜெயக்குமாரோ ஒருபடி மேலே சென்று, தமிழக அரசு கள்ள லாட்டரிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட்டது, அது ஒரு நம்பர் லாட்டரியானாலும்,மூன்று நம்பர் லாட்டரியானாலும், அடக்கிவருகிறோம்," என்று பேட்டியளித்ததோடு சரி. லாட்டரி மாஃபியாக்கள் விழுப்புரம் சம்பவத்திற்காக சில நாட்கள் மறைவாக அமைதிகாத்தவர்கள் மீண்டும் ஒவ்வொரு காவல்நிலைய ஆய்வாளர்களுக்கும் கப்பம் கட்டிவிட்டு மீண்டும் ஜரூராக துவக்கி நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் வல்லம், கும்பகோணம், பாபநாசம், நாகை மாவட்டத்தில் நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி. காரைக்கால் முழுவதும் என பல இடங்களில், குயில், தங்கம், நல்லநேரம், குமரன் என பல பெயர்களில் பஸ் டிக்கெட் பொல அச்சடித்து விற்பனை செய்துவருகின்றனர்.
"தினசரி பல லட்சம் புழக்கத்தில் இருக்கும் இந்த அவலத்தொழிலை தினக் கூலிகள், கட்டிட வேலை செய்பவர்கள், ஆட்டோ ஒட்டுபவர்கள் என வறுமைப் பிடியில் இருக்கும் நபர்களை இந்தக் கும்பல் லாட்டரிக்கு மயக்கி அடிமையாக்கியுள்ளனர். அதோடு அறிமுகம் இல்லாத புதியவர்களை சேர்க்கமாட்டார்கள், வாரம் ஞாயிற்றுக் கிழமையும், மாதத்தில் மூன்றாம் தேதியும் காவல்துறைக்கு கப்பம் போய்விடும். நாள் முழுவதும் வேலைசெய்துவிட்டு வாங்கும் சொற்ப சம்பளத்தையும் கல்ல லாட்டரி கும்பலிடம் இழுந்துவிட்டு, பசியோடு வீட்டில் தவிக்கும் பிள்ளைகளிடம் வெறுங்கையோடு செல்பவர்களே அதிகம், அதில் நானும் ஒருவன். நான் பட்ட துயரம் சொல்லி மாளாது.ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப கூலியில் வாங்கிய கடனை அடைத்துவருகிறேன், கால்வயிறுதான் எங்கவீட்டில் உணவு என்றாலும் நான் மாறிய சந்தோஷத்தில் என்னுடைய மனைவியும் பிள்ளைகளும் சந்தோஷமா என்னை மதிக்கிறாங்க.
அரசாங்கம் நிரந்தர முடிவு எடுக்கனும், எங்கே கஞ்சாவிற்கிறது, எங்கே கள்ளச்சாரம், பாண்டி சரக்கு விற்கிறது, எங்கே லாட்டரி விற்கிறது, யார் விற்குறாங்க, எங்கிருந்து வருது, யாரிடம் இருந்துவருது, என்ன தவறு நடக்குறது என்பது அனைத்துமே ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரிகளுக்கும் நல்லாவே தெரியும், ஆனால் அவங்க கையூட்டு வாங்கியதற்கு அடிமையா இருக்குறாங்க, அப்பாவிகள் கிடைத்தா வழக்குப் போட்டு நாங்க காவல்துறை தெரியுமா என வீராப்ப காட்டுவாங்க," என மடமடவென கொட்டித் தீர்த்தார் மூன்று மாதங்களுக்கு முன்பு லாட்டரிக்கு அடிமையாக இருந்து மீண்டுள்ள குடந்தை ஆட்டோ டிரைவர் ஆறுமுகம்.