கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் பலியான சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை யாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கள்ளச்சாரயம் குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, இரவு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகுதான் கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவைகள் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கேட்டதற்கு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்தேன் என்றார்கள். கள்ளச்சாராயத்தினால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கடைசி குடும்பம் எங்கள் குடும்பமாக இருக்கட்டும். இனிமேலாவது கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராய வியாபாரியான கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.