தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா மார்ச் 2 ஆம் தேதி காலை நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 29 கவுன்சிலர்களும், மஜ்லீஸ் கட்சியின் ஒரு கவுன்சிலர், சுயேட்சை கவுன்சிலர்கள் 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த 26 வார்டு உறுப்பினர்களை, திமுக நகர செயலாளர் சாரதிகுமார் சொகுசு பேருந்தில் அழைத்து வந்து பதவி பிரமாணம் எடுக்கவைத்தார். பின்னர் மீண்டும் சொகுசு பேருந்தில் பத்திரமாக அழைத்து சென்றார்.
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு தலைமையில் பதவி பிரமாணம் செய்த நிலையில் நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி முடியும் போது தேசிய கீதமும் பாடாமல் பதவியேற்பு விழா நடந்து முடிவடைந்தது. இது பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்தாய் வாழ்த்து பாடாதது குறித்து மஜ்லீஸ் கட்சியின் 19 வார்டு உறுப்பினர் நபீலா வக்கீல் அகமது, நகராட்சி ஆணையாளரிடம் இதுக்குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
அரசு நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதத்தை புறக்கணித்த நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல்கள் மக்களிடம் உருவாகி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.