புதியதாக உருவான இராணிப்பேட்டை மாவட்டத்தை சாராயம், காட்டன் சூதாட்டம், நம்பர் லாட்டரி என சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் விற்பனை நடைபெறாத மாவட்டமாக மாற்ற வேண்டும்மென மாவட்ட காவல்துறை தீவிரமாக உள்ளது.
அதன்படி காட்டன் சூதாட்டத்தை தடுக்க அதனை விற்பனை செய்பவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் தலைமையில், மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், இராணிப்பேட்டையை சேர்ந்த இரண்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட காட்டன் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கு வேலுரை சேர்ந்த ஒருவர் தான் முக்கிய ஏஜென்ட் என தகவல் சொல்லினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகரம், காட்பாடி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, கண்ணமங்களம், செய்யார் என பலயிடங்களில் ஏஜென்ட்கள் மூலம் காட்டன் சூதாட்டம் நடத்தும் பிரபல காட்டன் வியாபாரி வேலூர் வேலப்பாடியை சேர்ந்த 54 வயது முத்துச்சாமியை, இராணிப்பேட்டை நகர காவல்நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்காக காட்டன் விற்பனை ஏஜென்டான இராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரிடம், அரசின் தடை செய்யப்பட்ட லாரி சீட்டுக்களை விற்பனை செய்யச்சொல்லி என்னை முத்துச்சாமி மிரட்டினார் என புகார் வாங்கி அதன்படி முத்துச்சாமியை கைது செய்து சிறையில் போலீஸ் அடைத்துள்ளது என கூறப்படுகிறது.
மூன்று மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் மூலம் மட்டும் தினமும் 25 லட்ச ரூபாய்க்கு குறையாமல் முத்துச்சாமி சம்பாதித்தார் என்கிறார்கள் காவல்துறை தரப்பிலேயே. காட்டன் ஏஜென்ட்களோ, இதைவிட 3 மடங்கு அதிகமாக சம்பாதித்தார்கள் என்கிறார்கள்.