புதுச்சத்திரம் அருகே நெல் நடவு செய்த ஆயிரம் ஏக்கருக்கு மேல் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து நிலங்கள் பாலம்பாலமாக வெடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வாய்க்கால் வழியாக சென்று அதன் கிளை வாய்க்கலாக உள்ள மானம் பார்த்தான் வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீவரும். இந்த வாய்க்கால் மூலம் புதுச்சத்திரம் அருகேயுள்ள அத்தியா நல்லூர், கொத்தட்டை, சேந்திரகிள்ளை, பால்வாத்துண்ணான், மணிகொல்லை, வேளங்கிப்பட்டு, வில்லியநல்லுர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதிக்கு உட்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.
மானம்பாத்தான் வாய்கால் 25 கிலோமீட்டர் தூரம் கடந்து கழுத்தை வெட்டி வாய்க்காலாக பெயர் மாற்றம் அடைகிறது. இந்த வாய்க்காலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த கொஞ்சம் தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். தற்போது நடவு செய்து பயிர்கள் பச்சைபிடித்து வளரும் நேரத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர் காய்ந்து கருகி வருகிறது. மேலும் நிலங்கள் பாலம்பாலமாக தண்ணீரின்றி வெடித்துள்ளது. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர்மல்க கவலை அடைந்து மனவேதனையில் உள்ளனர்.
இந்தநிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கற்பனை செல்வம் தலைமையில் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஜெயக்குமார், சேகர், ராயர் ஆகியோர் நிலமையை கருதில் கொண்டு சேத்தியா தோப்பு அனைக்கட்டு வாய்காலில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் அனுமதிபெற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் கற்பனைச்செல்வம் இந்த பகுதியில் வறட்சியின் காரனமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் விவசாயிகள் நெல்நடவுசெய்துள்ளனர். அதுவும் தற்போது சரியான தண்ணீர் இல்லாததால் கருகும் நிலையில் உள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வாய்காலில் உள்ள தண்ணீரை உடனடியாக திறக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளார்.