பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து விட்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ஆனால், எடப்பாடி மீது திமுக தொடர்ந்திருந்த நெடுஞ்சாலை ஊழல் வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதில் முதல்வர் எடப்பாடி ஏக அப்-செட்!
இந்த நிலையில், இதுகுறித்து, மூத்த குற்றவியல் வழக்கறிஞர்களிடம் எடப்பாடி ஆலோசித்தபோது, "உச்சநீதிமன்றத்தில் இதற்கு தடை வாங்கினால் மட்டுமே சி.பி.ஐ. விசாரணையை தடுக்க முடியும். ஆனால், ஸ்டே கிடைக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் சீனியர்களிடமும் ஆலோசித்தார். இதனையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு ஸ்டே வாங்கும் முகமாக, லஞ்ச ஒழிப்புத் துறை உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அங்கு சில முயற்சிகளை எடுத்தையடுத்து சென்னை திரும்பினர்.
இந்த நிலையில், மேல் முறையீட்டில் அரசு தரப்பில் ஆஜராக உச்சநீதிமன்றத்தின் மூத்த சட்ட வல்லுநர்களான முகுல் ரோகத்கி, ஹரிஸ்சால்வே உள்ளிட்ட பலரை முதல்வர் தரப்பில் அணுகியுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர்களோ, "இவ்வழக்கில் தனது ஆரம்பக்கட்ட விசாரணையை சி.பி.ஐ. துவக்கிவிட்டதால் ஸ்டே வாங்குவது சாத்தியமில்லை" என தெரிவித்திருப்பதாக அதிமுக தலைமைக்கழக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களின் எதிர்மறையான கருத்துக்கள் எடப்பாடியை மேலும் அப்-செட்டாக்கியிருக்கிறது. மூன்று வாரங்களுக்குள் சம்மந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஸ்டே கிடைக்காமல் போனால், கோப்புகளை ஒப்படைத்தாக வேண்டும்.
கோப்புகள் கிடைத்ததும் விசாரணையை தீவிரப்படுத்தவிருக்கிறது சி.பி.ஐ.! ஆரம்பக்கட்ட விசாரணையில், ஊழல் நடந்திருப்பதை ஆவண ஆதாரங்களுடன் சி.பி.ஐ கண்டறியும் பட்சத்தில் எடப்பாடி மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்யும்! எடப்பாடி அரசுக்கு எதிரான துருப்புச் சீட்டுகள், 'டெல்லி' வசம் ஒவ்வொன்றாகக் குவியத் துவங்குகிறது.