இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு செயலாளர் இரா.முத்தரசன் இன்று நம்மிடமும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து பேசுகையில், "புதுவகையான கொரானா தொற்று நோய் பரவி வரும் பேராபத்து உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த ‘உயிர்க்கொல்லி’ நோயை எதிர் கொண்டு முறியடிக்க மருத்துவர் சமூகம் அர்ப்பணிப்பு உணர்வோடு களப்பணியாற்றி வருகிறது. ஆராய்ச்சி உலகம் நோய் தடுப்பு மற்றும் அழிப்புக்கான மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாகியுள்ளது. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்திய நாட்டில் கரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பது பெரும் சவாலாகும்.
நவதாராளமயக் கொள்கைகளால் மருத்துவச் சேவை கார்ப்பரேட் மயமாகி, லாபமீட்டும் தொழிலாளியுள்ளது. அரசு மருத்துவச் சேவையை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தியதால் ‘கொரானாவை’ எதிர்க்கும் போராட்டம் கடினமாகியுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் குறைந்தபட்ச வசதிகளுடன் மன உறுதியோடு பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது. கரோனா நோய் தொற்று மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் அரசின் பொறுப்பில் இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.
மத்திய, மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக ‘மக்கள் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என அறிவிறுத்தி வருகிறது. மக்கள் பெருமளவு வந்து செல்கிற பொதுத்துறை, தனியார்துறை, வங்கிகளின் செயல்படுவதிலும் நோய் தொற்று பரவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு சிந்திக்க வேண்டும். வரும் 22.03.2020 ஆம் தேதி பிரதமர் அறிவித்துள்ள ‘மக்கள் ஊரடங்கில்’ அனைவரும் பங்கேற்க வேண்டுகிறது.
கரோனா நோய் தொற்று தடுப்புக்காக தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வருமானம் இல்லாத நிலையில் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பலவீனமாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி வழங்குவது, அவர்களின் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின்கட்டண விலக்களிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.