‘சமூக பரவலைத் தடுத்து கரோனாவை விரட்டியடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல், பலசரக்கு கடைகளுக்குக் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் மக்கள்.பலசரக்கு வாங்க வேண்டும் என்ற அவசரம் மட்டுமே அவர்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருப்பதால்,அப்படி நடந்துகொள்கிறார்கள். இதனைத் தடுத்தாகவேண்டும்.’
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் விருதுநகர் ஏ.எஸ்.பி. சிவபிரசாத் மனதில் இப்படி ஒரு எண்ணம் எழ, புதிய திட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வந்துள்ளனர்.அது என்னவென்றால், தங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவையோ, அதனை ஒரு சீட்டில் எழுதி,தங்களின் முகவரி மற்றும் செல்போன் நம்பரைக் குறிப்பிட்டு,பலசரக்கு கடைகளில் கொடுத்துவிட வேண்டும். பொருட்கள் ரெடியானதும், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர், அதனைப் பெற்று, வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள். பொருட்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் அவர்களிடம் பணம் கொடுத்தால் போதும்.அந்தப் பணம் பலசரக்கு கடைகளில் சேர்க்கப்பட்டுவிடும்.
இந்தப் புதிய நடைமுறையால் பலசரக்கு கடையில் மக்கள் நீண்ட நேரம் கூட்டமாக நிற்பது தவிர்க்கப்படுகிறது.சந்துபொந்துகளில் உள்ள பலசரக்கு கடைகளும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனக் காவல்துறை விருதுநகர் மக்களுக்கு தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பலதேவ், உழவர் சந்தையில் ரூ.150 விலையில், பட்டியலிடப்பட்ட காய்கறி தொகுப்பு மக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளர். இது பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது.அதனால், குறைவான விலையில், விலை கேட்கவோ, பேரம் பேசவோ, எடை போடவோ நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியம் எழாமலும்,அந்த நேரத்தில் கூட்டம் சேர்வதற்கு வழியில்லாமலும் போகிறது.