கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்ற பி.சி.ஆர். கருவிகள் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கூறுகின்றன. இந்தக் கருவிகளை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு பிரித்து அனுப்பும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தென்கொரிய நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் மே 17- ஆம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே அதிக அளவு கரோனா பரிசோதனையைச் செய்த மாநிலம் தமிழகம் ஆகும். நேற்று (25/05/2020) மாலை 07.00 மணி நிலவரப்படி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 4,21,450 கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.