கரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ், இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக சென்னையில் மாநகர பேருந்துகள் மற்றும் பணிமனைகளில் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்து சுகாதார பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா வைரஸ் தடுப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் "இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை மாணவர்கள் அணுக வேண்டும். காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ள நபர்களிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். காய்ச்சல் அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.