கரோனா நோய்த் தொற்றை அழிக்க, உலகமே மருந்துக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் வேளையில், கரோனாவினைக் கட்டுப்படுத்தும் மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளது எனப் பழங்கால ஓலைச்சுவடிகளின் துணை கொண்டு மருந்து தயாரித்து, கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி வருகின்றது சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.
கடந்தாண்டு சீனாவின் வூகானில் உருவான கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி எண்ணற்ற உயிர்களைப் பலி கொண்டு வரும் வேளையில், இன்னது தான் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து என யாரும் அறுதியிட்டு கூறாத நிலையில், ’பழைய ஓலைச்சுவடிகளில் இதற்கான மருத்துவம் இருக்கின்றது’ என ஓலைச்சுவடிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை அனுகியிருக்கின்றார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவுடைப்பொய்கை பகுதியில் வசிக்கும் சித்த மருத்துவர் சொக்கலிங்கம்.
ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்ட, ஆடாதோடா, பேய்புடல், தூதுவளை, கோஸ்டம், தும்பை வேர் சமூலம், சீந்தில்கொடி, வில்வ வேர், சித்தரத்தை, கிராம்பு, நிலவேம்பு, கண்டங்கத்திரி, சுக்கு, திப்பிலி, மல்லி, கோரைக்கிழங்கு, தாளிச்சபத்ரி, ஏலம், வால்மிளகு உள்ளிட்ட 18 மூலிகைகளையும் ஒன்று சேர்த்து, ஏழு பகுதிகளாகப் பிரித்து, வகைக்கு 35 கிராம் வீதம் 630 கிராம் அளவை 90 கிராம் அளவாக்கி 1 லிட்டர் தண்ணீரில் நன்கு சுண்ட காய்ச்சி, 100 மில்லியாக்கி நாளைக்கு இரண்டு தடவை அருந்தினால் கரோனாவினைக் கட்டுப்படுத்தி குணப்படுத்தலாம் என்கின்ற அகஸ்தியர் வைத்திய முறையை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் விளக்க, ஆர்வப்பட்ட ஆட்சியரும் ஓலைச்சுவடிகளைப் படித்து, நிர்வாக ரீதியாக சில வழிக்காட்டல்களை வழங்கியுள்ளார்.
ஆட்சியரின் வழிக்காட்டுதலுடன் தயாரிக்கப்பட்ட வாத பித்த கப விஷ சுர கஷாயம் முதலில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கும், பாசிட்டிவ் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் காலை மாலை இரு வேளைகளிலும், திருப்புவனம் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், கேஸ் சிலிண்டர் விநியோகிப்பவர் மற்றும் செவிலியர்கள் ஆகியோர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகவும் இதன் காரணமாக மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டிலிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மொத்தமுள்ள கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் 11 நபர்களில் 4 நபர்கள் நலமாக வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.