ஆத்தூர் அருகே பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட இரண்டாவது நாளே ஒரு மாணவி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 24- ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.
பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, கல்வி நிலையங்களைத் திறப்பதில் அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வைச் சந்திக்க வேண்டும் என்பதாலும், முக்கிய பொதுத்தேர்வை எழுத வேண்டும் என்பதாலும் முதற்கட்டமாக எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்களுக்கு மட்டும் ஜன. 19- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன. வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோடு, வாரந்தோறும் மாணவர்களுக்கு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி திறக்கப்பட்டது. இங்கு 60- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கருமந்துறையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்.
அவர் கடந்த 19- ஆம் தேதியன்று கரோனா பரிசோதனை முடித்துவிட்டு வகுப்புக்கு வந்திருந்தார். பரிசோதனை முடிவுக்கு வியாழக்கிழமை (ஜன. 21) வெளியானது. இதில், அந்த மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அந்த மாணவி, ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் விடுதியில் தங்கியிருந்த 36 மாணவிகள் மற்றும் உடன் படித்து வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி திறக்கப்பட்டு இரண்டு நாளே ஆன நிலையில் மாணவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது, சுற்றுவட்டார ஊர்களிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.