கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகச் சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் 590 மில்லிகிராம் தங்கத்தில் வீட்டிலேயே 'தங்கி இரு' என்ற வாசகத்துடன் உருவங்களைச் செய்து அசத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் விசுவநாதன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (45). இவர் பொற்கொல்லர். இவர் தங்க நகைகளைச் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சம்பவங்கள் குறித்து, அது சம்பந்தமாக குறைந்த எடை கொண்ட தங்கத்தைக் கொண்டு அந்தப் பொருளைச் செய்து அசத்துவது இவரது வழக்கம்.
டெல்லி பார்லிமெண்ட்,ஜெயலலிதா உருவத்துடன் கூடிய தமிழக சட்ட மன்றம், சிதம்பரம் நடராஜர்கோவில், தாஜ்மஹால், சிவலிங்கம், தூய்மை இந்தியா உள்ளிட்டவையை மையமாகக் கொண்டு ஏராளமான பொருட்களைக் குறைந்த தங்கத்திலேயே செய்துள்ளார்.
இந்நிலையில் உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் சம்பந்தமாகவும் அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் குறைந்த எடை கொண்ட தங்கத்தில் பொருளைச் செய்து காண்பிக்க முடிவு செய்து சுமார் 590 மில்லி கிராம் எடை அளவு தங்கத்தில் கரோனா வைரஸ் மற்றும் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், இந்திய வரைபடம், முகக்கவசம் உருவங்களை உருவாக்கி "வீட்டிலேயே இரு" என்ற வாசகம் எழுதி அசத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் முத்துக்குமாரை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து முத்துக்குமரன் கூறுகையில், "தற்போது கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் குறைந்த அளவு தங்கத்தில் செய்துள்ளேன்" என்றார்.