கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நாளை (10/06/2021) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (10/06/2021) காலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து தமிழக முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.