ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணுளிப்பாம்பைக் கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருவர் மண்ணுளிப்பாம்பை கடத்திச் செல்வதாக அம்மாவட்ட வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். அங்கு இருவர் ஒரு மண்ணுளிப்பாம்பு மற்றும் 6 பச்சைக்கிளிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். வனத்துறைக் காவலர்கள் அவர்களைப் பிடிக்க முற்பட்ட நிலையில் இருவரும் தப்பியோட முயன்றனர். பின்னர் ஒருவழியாக கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து மண்ணுளிப்பாம்பும், கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மண்ணுளிப்பாம்பு தொடர்பான வதந்திகள் காரணமாக அரியவகை உயிரினமான மண்ணுளிப் பாம்புகள் கொல்லப்படுவது அதிகரிக்கும் நிலையில் இதுபோன்று சட்டவிரோதமாக மண்ணுளிப்பாம்புகள் விற்கப்படும் நிகழ்வுகள் தற்பொழுது வரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.