கரோனா பரவலைத் தடுப்பதற்கும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவைகளை மக்களுக்கு கொடுக்க தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தது தி.மு.க. இதற்கான கடிதத்தை தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் எம்.பி. ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கொடுத்திருந்தனர்.
இந்த கடிதத்தைப் பரிசீலித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி, கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதற்கான அனுமதி கடிதம் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், 'மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளது.