தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (24/04/2021) ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,000- யைத் தாண்டியுள்ளது. இதனால் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பேருந்துகள், ஆட்டோக்கள், ரயில் சேவை, புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அழகு நிலையங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று (25/04/2021) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று (24/04/2021) மாலை முதல் குவிந்த மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வேப்பூர், தொழுதூர், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் முண்டியடித்தனர். மதுப்பிரியர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தனர். பின்னர், அங்கு வந்த காவல்துறையினர், அவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தி, சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்தனர்.
அதேபோல், புதுச்சேரியிலும் ஏப்ரல் 23- ஆம் தேதி இரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டத்தால் புதுச்சேரியைச் சேர்ந்த மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்க கடலூர் மாவட்டத்திற்கு படையெடுத்ததால் வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.