தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02/07/2021) அறிவித்தார். மேலும், ஜூலை 5- ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (02/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 08.00 மணி வரை செயல்படலாம். கடைகளின் நுழைவு வாயிலில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். கடைகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. உணவகங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களில் குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியின்றி 50% பயணிகள் பேருந்து இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
50% வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் ஜிம்கள், விளையாட்டுகள், உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். பொருட்காட்சி அமைப்பாளர், விற்பனைக் கூடங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிப் போட்டிருக்க வேண்டும்.
பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் 50% பேருடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூங்காக்களில் திறந்தவெளியில் நடத்தப்படும் விளையாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும். தண்ணீர் (Water Sports) தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ- பதிவு முறை ரத்துச் செய்யப்படுகிறது.
SRF/JRF, M.Phil., Phd., ஆராய்ச்சி மாணவர்கள் கல்விச் சார்ந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களின் கல்விச் சார்ந்தப் பணிகளுக்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசுப் பயிற்சி நிலையங்கள், மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பயிற்சி நிலையங்கள்/ மையங்களில் 50% பயிற்சியாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தளர்வுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 5- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.