மறுஅறிவிப்பு வரும்வரை தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (29/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும்வரை நீட்டிக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று, சென்னையில் மெட்ரோ ரயில்களைக் குறைந்த அளவில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.
வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. மளிகை, காய்கறிக்கடைகள், இதர கடைகள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியாகச் செயல்படுகின்ற மளிகை, காய்கறிக் கடைகள் ஏசியின்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளில் பங்கேற்கும் பணியாளர்கள் பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்' அரசு அறிவுறுத்தியுள்ளது.